Sunday 16 July 2017

மாட்டிறைச்சி தடைக்குத் தடை வாங்கிய மதுரைப் பெண்மணி...



சைவ உணவு சாப்பிடும் என்னை அசைவ உணவு சாப்பிடும்படி சொல்வது எப்படி வன்முறையோ, அசைவ உணவு சாப்பிடுகிறவர்களை சைவம் சாப்பிடும்படி கூறுவதும் வன்முறைதான் என்கிறார் செல்வகோமதி.
மதுரையில் சிவராஜ் பாட்டீல் அறக்கட்டளை நடத்தும் இவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து மனுத் தாக்கல் செய்தார்.
செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, மத்திய அரசின் அறிவிக்கைக்கு  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மத்திய அரசின் இந்த உத்தரவு நாடுமுழுவதும் மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கியது. இது அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையில் தலையிடுவதாகும் என்பதால் வழக்குத்தொடர முடிவு செய்ததாக கூறுகிறார்.
அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையில் மட்டுமல்ல, மனித உரிமையிலும் தலையிடுவதாக இந்த உத்தரவு அமைந்திருக்கிறது என்கிறார்.
எனது மனுவை விசாரித்து வழங்கப்பட்டுள்ள இந்த இடைக்கால தடையால் நாடுமுழுவதும் உருவான பதற்றம் தணிந்துள்ளது. உத்தரவு வந்தவுடனேயே அதிகாரிகள் மாடு வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டனர்.
அவர்களுடைய நடவடிக்கைகளுக்கு இந்த உத்தரவு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இனியாவது, அரசியல் சட்டத்துக்கு புறம¢பான இந்த விதிகளை மத்திய அரசு திரும்பப்பெறும் என்று நம்புவதாக செல்வகோமதி தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த உத்தரவு தலித் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களுடைய உணவு உரிமையை பறிக்கிறது. பலிகொடுக்க விரும்பும் மத பற்றாளர்களின் உரிமையை பறிக்கிறது. அசைவ உணவு சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களின் விருப்பத்தையும் இது பறிக்கிறது.
உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை மத்திய அரசு ஏற்று உத்தரவை திரும்பப் பெற தவறினால், நிச்சயமாக முடிவுகாணும்வரை வழக்காடுவேன் என்கிறார் இவர்.
இப்படி ஒரு வழக்கை போட்டு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள இவர் அடிப்படையில் சைவ உணவு சாப்பிடுபவர். முட்டைகூட சாப்பிட மாட்டாராம். 
நிச்சயமாக வியப்பாகத்தான் இருக்கிறது. இவருடைய போராட்டம் வெல்ல வாழ்த்துவோம்.http://puthiyamugam.com/article-details.php?id=5873